வெங்காயத்தை உறித்தால் மட்டும் கண்ணீர் வராது, இப்போது வாங்க சென்றாலும் கண்ணீர் வருகிறது என்கிறார்கள் மக்கள்.
வாழ்க்கையில் நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்த பெரிய வெங்காயம் மிகவும் அவசியமானது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்தபடியே வருகிறது. டெல்லி ,சென்னை உட்பட பகுதியில் ரூ.70 முதல் ரூ .80 வரை பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் அங்கு இருந்து வெங்காய வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் வெங்காய வியாபாரி ஒருவரிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் திருடப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடோனில் வைக்கப்பட்டிருந்த 328 வெங்காய மூட்டைகளையும், 1.7 லட்ச ரூபாய் பணத்தையும் இரவோடு இரவாக யாரோ திருடி சென்றுவிட்டதாக வியாபாரி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.