இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ-வின் தேசிய ரிமோட் சென்சிங் சென்டர் (என்.ஆர்.எஸ்.சி) விஞ்ஞானி ஹைதராபாத்தில் உள்ள அவரது குடியிருப்பில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை பூர்விகமாக கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் (56) ஹைதராபாத் அமீர்பேட்டை அண்ணப்பூர்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி மற்றும் மகள் சென்னையிலும், மகன் அமெரிக்காவிலும் வசித்து வந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இவர்களது குடும்பம் இதே குடியிருப்பில் தான் வசித்து வந்துள்ளது . கடந்த 2005 ஆம் ஆண்டு அவரது மனைவிக்கு சென்னைக்கு பணிமாறுதல் கிடைத்த பிறகு, சுரேஷ் மட்டும் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவர் அலுவலகம் வராததை அடுத்து, அவருடன் பணியாற்றுபவர்கள், அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்காததால் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷ் வசிக்கும் அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அவரது உறவினர்கள் அவரின் வீட்டை ஆய்வு செய்தனர்.
அப்போது சுரேஷை யாரோ கொன்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், சுரேஷின் மனைவிக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கனமான ஆயுதம் ஒன்றை கொண்டு சுரேஷ் அடித்து கொல்லப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.