உத்தர பிரதேசம் மாநிலம், பெரோஷா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷகீல் (35). இவருக்கும் பாராபங்கி பகுதியைச் சேர்ந்த தமன்னாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்தில் முகமது ஷகீர் குடும்பத்தினர், தமன்னாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரிடம் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதனால், தமன்னா பாராபங்கியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தமன்னாவின் கணவர் முகமது ஷகீர் பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையில், தமன்னா பாராபங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய முகமது ஷகீர் தமன்னாவின் சொந்த ஊரான பாராபங்கிக்கு சென்றார். அதன் பின்னர், முகமது ஷகீர் தமன்னாவுடன் 6 நாள்கள் தங்கிவிட்டு தனது சொந்த ஊரான பெரோஷாவுக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முகமது ஷகீர் மீண்டும் தனது மனைவியை தேடி பாராபங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது தமன்னா வீட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. மேலும், தமன்னா பணிக்காக பள்ளிக்கு சென்றுள்ளதாக தமன்னாவின் தாயின் மூலம் தெரிந்துகொண்டார். அதனால், முகமது ஷகீர் தமன்னா பணிபுரியும் பள்ளிக்கு சென்றார். அங்கு தமன்னா வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். நேரடியாக வகுப்பறைக்கு சென்ற முகமது ஷகீர், தமன்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் தமன்னாவிடம் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.
இதுகுறித்து, தமன்னா கோட்வாலி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முகமது ஷகீர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.