Skip to main content

இரண்டு தக்காளியால் பிரிந்த கணவன் மனைவி

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Husband and wife separated by two tomatoes

 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளியின் விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 120 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தக்காளி விலை கிலோ ரூ. 150-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்திற்கும் மேலான தக்காளி திருடு போனதால், தோட்டத்திற்கு காவல் போட்ட சம்பவம், கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்ஸர்களை வேலைக்கு வைத்தது உள்ளிட்ட உள்ளிட்ட பல வேடிக்கை சம்பவங்கள் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அந்த வகையில் தக்காளி விலை உயர்வு காரணமாகக் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் அந்தப் பகுதியில் தனியார் டிபன் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சில நாள்களுக்கு முன் சமைக்கும்போது தன்னுடைய மனைவிக்குத் தெரியாமல் கூடுதலாக இரண்டு தக்காளியைச் சேர்த்து சமைத்துள்ளார். இதனால், அவரின் மனைவி, “என்னிடம் கேட்காமல் ஏன் இப்படி செய்தீர்கள்” என்று கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் சண்டையாக மாறியுள்ளது.

 

இதனால், ஆர்த்தி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை எங்கு தேடியும் கிடைக்காததால் சஞ்சீவ் பர்மன் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை விசாரித்த காவல்துறையினர், ஆர்த்தி தனது கணவனோடு சண்டையிட்டு அவரது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளார் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர், ‘இருவரையும் அலைப்பேசி மூலம் பேச வைத்து சமரசம் செய்துள்ளோம். ஆர்த்தி விரைவில் அவரது வீட்டிற்குத் திரும்புவார்’ என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்