இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான முறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இந்த மோசடியானது நடைபெற்றுள்ளது. முன்னதாக இந்தக் கிளையில் வைர வியாபாரி நீரவ் மோடி என்பவர் இதே வங்கிக் கிளையில் வேலை செய்யும் ஊழியர்கள் உதவியோடு ரூ.280 கோடி பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நீரவ் மோடி, அவரது மனைவி மற்றும் சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கிளையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் செட்டி, தற்போது பணிபுரியும் மனோஜ் கட்டார் உள்ளிட்டோரின் மீதும் புகாரளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தக் கிளையில் வெளிநாடுகளுக்கு முன்கூட்டியே பணப்பரிவர்த்தனை செய்யும் முறையில் ரூ.11,500 கோடி அளவிற்கு மெகா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘ஸ்விப்ட்’ முறையில் பணப்பரிவர்த்தனை செய்வதில் இந்த முறைகேடு நடந்தேறியுள்ளது. பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, இரு நிறுவனங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தினால் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்வது நடைமுறையில் இருந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றாமல், வங்கி ஊழியர்கள் சுய லாபத்திற்காக முறைகேடில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தக் கிளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ள இந்த மோசடியால், அந்த வங்கி பங்குகள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இதனால், அந்த வங்கிக்கு ரூ.3,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.