தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று கூட ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300க்கும் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு 10 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தில் திரும்பி ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இப்படி தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்பம் அனுபவிப்பர் என வேதனை தெரிவித்ததோடு, தமிழக மீனவர்களின் துயர் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என வரும் அக்.14 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.