கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பெண் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டில் அவரை சில அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மிக மோசமான இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு அப்போதைய கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சி.ஐ.டி. அதிகாரிகள் இதற்கு முன்னர் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புகர்கி ஆகியோரின் கொலை வழக்குகளோடு கவுரி லங்கேஷின் கொலைவழக்கும் ஒத்துப்போயுள்ளதாகக் கூறப்பட்டது.
கெளரி லங்கேஷ் கொலை சம்பவத்தில், இந்து யுவசேனா அமைப்பின் நிர்வாகி நவீன்குமார் (37) உள்பட 18 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில், ஏற்கெனவே, 8 பேருக்கு பெங்களூர் நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. இந்த நிலையில், கவுரி லங்கேஷ் கொலை சம்பவம் தொடர்பாக கடந்த 9ஆம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த 8 பேரில், சிறையில் இருந்து வெளிவந்த 2 பேருக்கு இந்து அமைப்பினர், மாலையிட்டு வரவேற்பு அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும், உள்ளூர் காளி கோவில் ஒன்றுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அப்போது அவர்களுக்கு, ‘ஸ்ரீ ராம சேனா’ உள்ளிட்ட இந்து அமைப்பினர் சால்வை போர்த்தி, மாலையிட்டு ‘பாரத் மாதா கி ஜே’ எனக்கூறி சனாதன தர்மத்தை குறிப்பிட்டு வரவேற்பளித்தனர். மேலும், அவர்களை மத சடங்குகளை செய்ய வைத்துள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்து அமைப்பினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.