உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் கார்கிவில் நிகழ்ந்த வெடிகுண்டு வீச்சில், ரயில் நிலையம் செல்ல முயன்ற இந்தியாவைச் சேர்ந்த மாணவர் நவீன் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த உக்ரைனில் உள்ள இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, உக்ரைனில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யப் படைகள். குறிப்பாக, கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம்.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பியூஸ் கோயல் மற்றும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கார்கிவ் நகரத்தில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பது, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மிக விரைவாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல் கூறுகின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு தரப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.