
உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப் பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ எனும் அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 23ம் தேதி மத்திய அரசு, மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ‘சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொடுத்தது. அதன்படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில், 'அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தற்போதைய நிலவரத்திற்கேற்ப கடைப்பிடிக்க வேண்டும். கரோனா உறுதி செய்யப்பட்டோரின் ரத்த மாதிரிகளை உடனே மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் மனோகர் அக்னேனி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கொரோனா தொற்று பரவல் காலங்களில், உயிர்களைக் காப்பதற்கு மருத்துவ ஆக்ஸிஜன் இன்றியமையாததாகும். எனவே, மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்ட உயிர் காக்கும் உபகரணங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். படுக்கைகள் மற்றும் வெண்டிபேட்டர்களை போதுமான அளவுக்கு கையிருப்பு வைக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.