ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பில் இருந்து உர்ஜித் படேல் கடந்த திங்கள் அன்று திடீரென தனது சொந்தக் காரணங்களுக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் பதவியேற்றார். நேற்று இவரின் தலைமையில் ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மொத்தம் 18 இயக்குனர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்கள், பணப்புழக்கம், கடன் வழங்குதல், நிதி மேலாண்மை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.
ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரி நிதியை கையிருப்பு வைத்து கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்ய ஆறு வல்லுநர்கள் கொண்ட கமிட்டியை அமைப்பது என்று நவம்பர் மாதம் உர்ஜித் படேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை அந்தக் கமிட்டிக்கு தலைவரை பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.