ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்து ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டனர். மேலும் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டின் முன்பும் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டனர்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில், விசாரணைக்கு பிறகு தனது இல்லத்தின் வெளியே கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “எனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால், சதிகாரர்களின் சவப்பெட்டியில் இறுதி ஆணி எங்களால் போடப்படும்.
நாங்கள் பயப்பட மாட்டோம். உங்கள் தலைவர் முதலில் தோட்டாக்களை எதிர்கொண்டு உங்கள் மன உறுதியை உயர்த்துவார். உங்களின் இடைவிடாத ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஹேமந்த் சோரன் ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் பின்னால் நிற்பார்” எனத் தெரிவித்தார்.