வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. டெல்லியில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 153 மி.மீ மழை பதிவானது. அதன் பிறகு நேற்று ஒரே நாளில் 153 மி.மீ மழை பெய்துள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் முக்கியச் சாலைகள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறு போல் காட்சியளிக்கிறது. தொடர் கனமழை காரணமாக டெல்லி மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி இரு நாட்களில் 16 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் உள்ள அதன்குட் அணை நிரம்பியதால் யமுனை நதியில் வினாடிக்கு 2 லட்சத்து 79 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் இன்று அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது தீவிரமடைந்து கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.