மஹாராஷ்ட்ரா மாநிலம் அகோலா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் சார்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இதனை ஏற்கவில்லை. இதனையடுத்து அச்சாதியினரின் பஞ்சாயத்து கூடியது.
இதில் மறுமணம் செய்த பெண்ணுக்குத் தண்டனையாக, தாங்கள் வாழை இலையில் துப்பும் எச்சிலை அந்தப் பெண் நக்க வேண்டும் என சாதி பஞ்சாயத்தினர் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், மறுமணம் செய்துகொண்ட பெண்ணுக்குத் தண்டனையாக ஒரு லட்சம் அபராதமும் விதித்தனர்.
ஆனால், சாதி பஞ்சாயத்தின் தீர்ப்பை தைரியமாக எதிர்த்த அந்தப் பெண், இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்ததையொட்டி இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இன்றைய சூழலிலும் மறுமணம் தவறாக கருதப்படுவதும், அதற்கு சாதி பஞ்சாயத்து விதித்த தண்டனையும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.