
தனது மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி இருந்ததால் பெற்ற மகளையே கொன்ற தந்தையின் செயல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலம்பாத் பகுதியை சேர்ந்தவர்கள் நரேஷ் - ஷோபா தம்பதியினர். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகள் உள்ளார். கல்லூரியில் படித்து வரும் இவரை காணவில்லை என அவரது தந்தை நரேஷ் சில தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன பெண்ணை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், அலம்பாத் கிராமத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நிலையில் ஒரு இளம்பெண்ணின் சலடம் கிடந்துள்ளது. இதனைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது நரேஷின் காணாமல் போன மகளின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் இது குறித்து நரேஷ் மற்றும் அவரது மனைவி ஷோபாவிடம் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியதையடுத்து மகளை தாங்களே கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும், எங்கள் மகள் பல இளைஞர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அத்துடன் அவரது பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி இருப்பதையும் பார்த்தோம். அதனால் எங்கள் மகளின் மீது சந்தேகப்பட்டு கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டோம். அதனை மறைக்க உடலின் மீது ஆசிட்டை ஊற்றி அடையாளத்தை அழித்து உடலை கால்வாயில் போட்டுவிட்டோம் என்று நரேஷ் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு நரேஷின் இரு சகோதரர்கள் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.