காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் பாஜகவில் இணைய உள்ளார் ஹர்திக் பட்டேல்.
கடந்த 2015ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஹர்திக் பட்டேல். அதிகப்படியான மக்கள் செல்வாக்கால் அரசியல் கட்சியினரை ஆச்சரியப்படுத்தி அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்தார். இதற்கிடையே திடீர் திருப்பமாகக் கடந்த 18ம் தேதி அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். தன்னை குஜராத் காங்கிரஸ் கமிட்டி ஒதுக்குவதாகக் குற்றம் சாட்டிய அவர் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நாளை மறுநாள் தான் பாஜகவில் இணைய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரின் வருகை மாநில பாஜகவுக்கு மேலும் வலிமை தருவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் பாஜகவில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவி கேட்போம் என்று அவரின் ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறியுள்ளார். ஆனால் பதவி தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை என்று ஹர்திக் பட்டேல் மறுத்துள்ளார்.