வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு எழுந்துள்ள அதேசமயம், அடுத்து நடைபெறவுள்ள பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில தேர்தல்களை மனதில் வைத்தே இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்தநிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்ரமணியண் சுவாமி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக பாஜக பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஓராண்டு காலமாக வெயிலிலும், கடும் குளிரிலும் அமைதியாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளின் துயர், மோடி பின்வாங்கியுள்ளதால் முடிவுக்கு வந்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் பிரதமரைப் பின்வாங்கக்கோரி தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாததற்கு பாஜக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல் இன்னொரு ட்விட்டில், "இந்துக் கோவில்களின் சுதந்திரத்தை அபகரிப்பதில் இருந்து பின்வாங்க வேண்டுமெனப் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் பாஜகவிடம் கூற வேண்டிய நேரம் இது. கோவில்கள் கையகப்படுத்தப்பட்டது அப்பட்டமான சட்டவிரோதம். மேலும் அது பாஜகவிற்கு அவமானம்" என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து தனது இன்னொரு ட்விட்டில் சுப்பிரமணியன் சுவாமி, "நமது நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை இப்போதாவது மோடி ஒப்புக் கொள்வாரா?. சீனாவின் வசம் உள்ள ஒவ்வொரு அங்குலத்தையும் திரும்பப் பெற மோடியும் அவரது அரசும் பாடுபடுமா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.