உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே பசல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 1 படிக்கும் மாணவி. இவர், கடந்த 2021ஆம் ஆண்டின் போது, அங்குள்ள ஜிம் பயிற்சியாளர் அர்ஜுன் சிங்கிடம் பழகி வந்துள்ளார். நண்பர்கள் என்ற நோக்கத்தில் பழகி வந்த மாணவியை, அர்ஜுன் சிங் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, அந்த மாணவியை தான் வேலை பார்க்கும் ஜிம்மிற்கு அழைத்து சென்று, மாணவிக்கு அர்ஜுன் சிங் போதை மருந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து, போதை மருந்து கொடுத்து, அந்த மாணவியை போதைக்கு அடிமையாக்கி உள்ளார். போதையில் இருக்கு மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, மாணவியை மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அந்த மாணவி, தனக்கு நடந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். ஆனால், பயிற்சியாளர் அர்ஜூன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணவியின் பெற்றோர், அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஜிம் பயிற்சியாளரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.