குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் மாயமானது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது 1986 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பானது குற்றம் சார்ந்த புள்ளிவிவரங்கள் மற்றும் அறிக்கைகளை தேசிய மற்றும் மாநில அளவில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வெளியான அந்த அறிக்கையில், "2016 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 105 பெண்களும், 2017 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 712 பெண்களும், 2018 ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 246 பெண்களும், 2019 ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 268 பெண்களும், 2020 ஆம் ஆண்டு 8 ஆயிரத்து 290 பெண்களும் என மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.