டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
அதே சமயம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் சிங்கை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில் சஞ்சய் சிங் எம்.பி. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றம் தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளார்.