ஐரோப்பிய யூனியளிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து கடந்த 2016ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 48.11 சதவீத மக்கள், அந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதை’பிரெக்சிட்’ என்று அழைக்கப்பட்டது. யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் உடன்பாடில்லாத அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். இதனை அடுத்து தெரசா மே பதவி ஏற்றார். பிரிட்டன் விலகுவதற்கு, அந்த கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இப்போது அது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி மூன்று நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் 5 மணி நேரம் விவாதம் நடத்தி பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையின் ஒப்புதலை பெற்றார்.
இதனையடுத்து, பிரெக்சிட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வம்சாவளியான அமைச்சர் சைலேஷ்வரா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து மேலும் மூன்று அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அடுத்தாண்டு மார்ச்சுக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வரைவு ஒப்பந்தம் திருப்தி அளிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரசா மே அமைச்சரவையிலிருந்து 4 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இது பிரதமர் தெரசா மேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அரசு மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த எம்பிக்கள் வலியுறுத்தி கடிதம் கொடுத்து வருகின்றனர். இதுவரை 28 கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவையில் 15 சதவீதம், அதாவது 48 எம்பிக்கள் கடிதம் கொடுக்கும் பட்சத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படும். எனவே தெரசா மே அரசு மீது விரைவிலேயே நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் தெரசா மே கூறியுள்ளது, ‘‘நமது சட்டம், எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், ஒற்றை சந்தையிலிருந்து வெளியேறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விஷயங்கள் மீது இங்கிலாந்து மக்கள் கவலை கொண்டிருப்பதாலே, அவர்கள் வாக்களித்தபடி பிரக்சிட்டை நிறைவேற்ற உழைத்துக் கொண்டிருக்கிறோம். நான் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சரியான விஷயத்தை செய்து கொண்டிருக்கிறேன். எனவே எந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் தயார்" என்றார். இந்த பிரெக்சிட் விவகாரம் பிரிட்டன் அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.