வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 8 சதவீதத்திலிருந்து இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி 33 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது.
மும்பையில் 18.12.18 அன்று நடந்த ரிபப்ளிக் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 99 சதவீத பொருட்கள், அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதமும் 18 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் கொண்டுவர அரசு விரும்புகிறது என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இனிமேல் ஆடம்பர பொருட்கள் மட்டும் 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி 31-வது ஜிஎஸ்டி கவுன்சி கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. அதில், 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28% இருந்து 18 % ஆக குறைத்தும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% இருந்து 5% ஆக குறைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அப்போதே வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியும் விரைவில் குறைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ரியல் எஸ்டேட் மீதான வரிவிதிப்பு பற்றிய விவாதம் நடந்தது. அதில், வாங்கத்தக்க வீடுகளுக்கான (குறந்த விலை) ஜி.எஸ்.டி வரி 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும், அதிக மதிப்புள்ள வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.20 இலட்சம் மதிப்புள்ள வீடுகள், குறைந்த விலை வீடுகள் எனக் கருதப்பட்டது. இது தற்போது ரூ.45 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ நகரங்களிலும், பிற நகரங்களிலும் குறைந்த விலை வீடுகள் எனும் கணக்கில் ரூ.45 இலட்சம் வரை உள்ள வீடுகள் அடங்கும்.
அதேபோல் பரப்பளவு அளவில் மெட்ரோ நகரங்களில் உள்ள வீடுகள் 60 சதுர மீட்டர் பரப்பளவும், பிற நகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவும் கொண்ட வீடுகள் குறைந்த விலை வீடுகளாக கருதப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாங்கத்தக்க வீடுகளுக்கான வீடுகளுக்கு ஜி.எஸ்.டி வரி 8 சதவீதமாகவும், அதிக மதிப்புள்ள வீடுகளின் ஜி.எஸ்.டி வரி விகிதம் 12 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அறிவித்திருக்கும் புதிய ஜி.எஸ்.டி வரி விகிதம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.