பீகார் மாநிலத்தின் கனவுத்திட்டமாகப் பார்க்கப்படும் கோசி ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பீகார் மாநிலத்தின் நிர்மலி மற்றும் பாப்தியாஹி இடையே கோசி ஆற்றின் வழியே 1887 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ரயில் பாதை கடந்த 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நில நடுக்கத்தின் போது இடிந்து தரைமட்டமானது. இதன்பிறகு, இப்பகுதியில் பாலம் கட்டப்படாத நிலையில், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனிடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த ஆற்றின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டுவதற்கான திட்டத்தை 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தது. 1.9 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் கட்டுமான செலவு ரூ. 516 கோடி ஆகும். இந்திய- நேபாள எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகக் கருதப்படும் இந்தப் பாலத்தின் கட்டுமானப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதன் பணிகள் அண்மையில் முடிவடைந்த சூழலில், இன்று பிரதமர் மோடி இந்தப் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.