உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றம், லக்கிம்பூர் வன்முறை குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ள இந்த வழக்கு இன்று (07.10.2021) விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு லக்கிம்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இந்த வன்முறை குறித்து விசாரிக்கும் ஒரு நபர் ஆணையமாக நியமிக்கப்பட்டுள்ளார். வன்முறை குறித்து விசாரிக்க இந்த ஒரு நபர் ஆணையத்திற்கு இரண்டு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.