புதுச்சேரி வாணரப்பேட்டை தோப்பு பகுதியில் எல்லை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் காலை, மாலை இருவேளையும் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. அதன்படி எல்லை காளியம்மன் கோவிலில் நேற்று இரவு திருவிழா நடந்து கொண்டிருந்தது. விழாவை காண அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். விழாவில் ஆயுள் தண்டனை முடிந்த 6 மாதத்திற்கு முன்பு விடுதலையான பிரபல ரவுடி குமார் (எ) சாணிக்குமார் ஒருவர் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணியளவில் ஏ.எப்.டி திடல் பகுதியில் இருந்து முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், அந்த பிரபல ரவுடியை கொல்ல சதிதிட்டம் தீட்டி கோவில் திருவிழாவில் பங்கேற்ற ரவுடியை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். ஆனால் மர்ம கும்பல் வீசிய நாட்டு வெடிகுண்டு குறி தவறி கோவில் சுவற்றில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் கோவிலில் விழாவில் பங்கேற்ற நபர் ஒருவர் காயமடைந்தார். பின்னர் அந்த ரவுடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மேலும் வெடிகுண்டு வீசிய மர்மநபர்களும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். திருவிழாவின்போது கோவிலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் ரவுடி குமாரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் அவரது வீட்டின் அருகே மறைந்திருந்து, அவரை மடக்கி வெட்டிக்கொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த குமார் அங்கேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த காவல்துறை சடலத்தை கைப்பற்றி ராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குமாரை கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
இதேபோல் புதுச்சேரியின் சமூகநலத்துறை அமைச்சரான கந்தசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று காலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக காவல் நிலைய அதிகாரிகள் உப்பளத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய்கள் வெடிகுண்டு நிபுணர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டு அமைச்சர் கந்தசாமி இல்லத்தில் முழுவதுமாக சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் கந்தசாமி தனது இல்லத்திற்கு வந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கந்தசாமி, தனக்கு மிரட்டல் விடும் அளவிற்கு யாரும் எதிரிகள் இல்லை எனவும் தொலைபேசி அழைப்பு விடுத்த மர்ம நபரை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.