ஆதாரைப்போல உலகத்தரம் வாய்ந்த தகவல் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர அரசு திட்டம்!
ஆதார் திட்டத்தைப் போல வலுவான, உலகத்தரம் வாய்ந்த தகவல் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட ரவிசங்கர் பிரசாத், ‘ஆதார் எப்படி உலகத்தரம் வாய்ந்த திட்டமாக உள்ளதோ, அதேபோல், தகவல் பாதுகாப்பு சட்டத்தையும் கொண்டுவர அரசு முயற்சி எடுத்து வருகிறது. தகவல் இருப்பு, தகவல் பயன்பாடு மற்றும் தகவல் தனியுரிமை குறித்த முக்கியமான விவரங்களை சேகரிக்க, குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த குழு இன்னும் மூன்று மாதங்களில் அறிக்கை வெளியிடும். இந்த தகவல் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் இந்திய மக்களின் இறையாண்மையை பாதிக்காமல், தகவல்களை அரசியலமைப்பிற்காகவும், இந்தியாவின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது’ என்றார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலமாக இன்னும் 5 - 7 ஆண்டுகளில் 50ஆயிரம் முதல் 75ஆயிரம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கப் போவதாகவும், டிஜிட்டல் பொருளாதாரத்தின் பயன்பாடு 2 ட்ரில்லியன் டாலர்களாக அதே காலகட்டத்தில் உயரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 2016ல் நாளொன்றுக்கு 3,700ஆக இருந்த பணமற்ற பொருளாதாரம், தற்போது நாளொன்றுக்கு 54 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்