ஜார்கண்ட் மாநிலத்தில் 222.68 ஹெக்டேரில், ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அதானி பவர் நிறுவனத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜார்கண்டில் உள்ள மோதியா, மாலி, கெய்காட் மற்றும் கோடா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் ஆகியவற்றில் 425 ஹெக்டேர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அதானி பவர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. தற்போது அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
ஆனால் தற்போது வெறும் 222.68 ஹெக்டேருக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 202.32 ஹெக்டேருக்கு ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. இதன் மூலம் தற்போது ஒப்புதல் அளித்துள்ள 222.68 ஹெக்டேரில் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டில் 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு சூப்பர்கிரிட்டிகிள் நிலையங்களை அதானி பவர் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையங்கள் 2022-ல் நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதும் பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.