கோரக்பூர் குழந்தைகள் மரணத்தை விளக்கும் மருத்துவமனை அறிக்கை!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கான காரணங்களை விளக்கும் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் 30 குழந்தைகள் மரணமடைந்த நிலையில், உபி மாநில அரசு மூளைவீக்க நோயால் தான் குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமில்லை என்றும் தெரிவித்தது. பின்னர் இந்த தொடர் மரணங்கள் குறித்த கேள்விகள் அனைத்து தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டன. எதிர்க்கட்சியினர் கண்டனக்குரல்களை எழுப்பினர்.
தற்போது ஆங்கில இதழ் ஒன்றுக்குக் கிடைத்த தகவலின் படி, மருத்துவமனையில் நிகழ்ந்த குழந்தைகள் மரணங்களுக்கான காரணங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ஏற்பட்ட முதல் 30 மரணங்களில் 5 மட்டுமே மூளை வீக்கத்தால் ஏற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை ஹெபேடிக் என்செபலோபதி எனப்படும் மூளைவீக்க வியாதியோடு தொடர்புடைய நோயால் உயிரிழந்துள்ளது. மேலும் அவர்களில் சில குழந்தைகள் நிமோனியா, செப்சிஸ், பன்றிக்காய்ச்சல் மற்றும் சத்துக்குறைவுடன் குறைமாதத்தில் பிறந்ததாலும் உயிரிழந்துள்ளனர்.
ஆக்ஸ்ட் 12-ஆம் தேதி உயிரிழந்த 13 குழந்தைகளில் ஒன்று மட்டுமே மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்டது என மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்