கூகுளின் தாய் நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்.
சென்னையில் பிறந்த இவர், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பயின்றவர். கரக்பூர் ஐ.ஐ.டி.யில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்ற சுந்தர் பிச்சை, கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2015- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். தானியங்கி கார்கள், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் உள்ளன. 'ஆல்பபெட்' நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த லாரி பேஜ்க்கு பதிலாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கூகுள் நிறுவன சி.இ.ஓ பொறுப்புடன் கூடுதலாக ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பையும் சுந்தர் பிச்சை கவனித்து கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.