
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் அதிகாரம் பலம் கொண்டோர், சம்மந்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்று கடிதத்தில் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தான் பலிக்கடா ஆக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து நேரில் சந்தித்து விரிவாக விளக்க வேண்டும் என்றும், இதற்காக அனுமதி தர வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தங்கக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், இதில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.