இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், நாட்டின் கரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கரோனா இரண்டாவது அலை நாம் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கரோனா நிலவரம் குறித்து லாவ் அகர்வால் கூறியதாவது; கடந்த வாரம் 5.86%ஆக இருந்த ஒட்டுமொத்த கரோனா உறுதியாகும் சதவீதம், தற்போது கிட்டத்தட்ட 1.68 ஆக உள்ளது. சராசரியாக, தினமும் 20,000 கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இதில் கடந்த வாரம் கேரளாவில் இருந்து மட்டும் 56 சதவீத பாதிப்புகள் பதிவாகின. கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மிசோரம் மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா சவால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஓரளவிற்கு கரோனா இரண்டாவது அலையை நாம் கட்டுப்படுத்தவில்லை எனக் கூறலாம். கரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ள சில மாவட்டங்கள் உட்பட 28 மாவட்டங்களில் கரோனா உறுதியாகும் சதவீதம் ஐந்து முதல் பத்து சதவீதமாக உள்ளது. இது அதிக தொற்று சதவீதமாகும். 34 மாவட்டங்களில் வாராந்திர கரோனா உறுதியாகும் சதவீதம் 10-க்கும் அதிகமாகவுள்ளது.
லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சலப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் மக்கள் தொகையில் 100 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளன. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.