ராஜஸ்தானை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாற்பது ஆண்டுகள் கழித்து தன்னுடைய கல்வியை தொடர்ந்துள்ளார்.
மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை பற்றி அறிவுரை சொல்லக்கூடிய இவர் தனது பால்ய காலத்தில் பள்ளி படிப்பின் போதே கல்வியை நிறுத்தியுள்ளார். தற்போது அதை உணர்ந்து மீண்டும் கல்வி கற்க முன் வந்துள்ளார்.
உதைப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பூல் சிங் மீனா(வயது 55) தற்போது பிஏ முதலாம் ஆண்டு தேர்வை எழுதியுள்ளார். ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்த இவர், அதற்கு மேல் கல்வி கற்கவில்லை. தற்போது இவருடைய ஐந்து மகள்களின் உந்துதலுக்கு பிறகு இவர் மீண்டும் கல்வி கற்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
"இந்திய இராணுவத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனது தகப்பனாரின் மறைவுக்கு பின்னர் குடும்ப சூழ்நிலைக்காக விவசாயம் செய்து என் குடும்பத்தை காப்பாற்றினேன்" என்று எம்எல்ஏ கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரான பின்பே அவருடைய மகள்கள் கல்வி கற்றுக்கொள்ளுங்கள். பலரை சந்திக்க நேரிடும், பலருக்கு கல்வியின் அவசியத்தை தெரிவிக்க நேரிடும் என்றெல்லாம் வற்புறுத்தியுள்ளனர். பின்னர், அவரே அதை உணர்ந்து கல்வி கற்க வேண்டி 10,12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று தற்போது பிஏ முதலாம் ஆண்டு தேர்வை எழுதியுள்ளார். நாற்பது வருடம் கழித்து தன்னுடைய கல்வியை கற்றுவரும் இவரை பல்வேறு கல்வி ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.