ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ளது ஞானவாபி மசூதி. விஸ்வநாதர் கோவிலை ஒட்டி உள்ள இம்மசூதியில் சுற்றுச்சுவர்களில் உள்ள இந்து கடவுளின் உருவங்கள் தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ஐந்து பெண்கள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி வாரணாசி நீதிமன்றம் விசாரிக்க இருந்தது. இந்நிலையில் ஞானவாபி மசூதி வகுப்பு வாரிய சொத்து என்றும், எனவே அங்கு மாற்று மத வழிபாடு என்பதை அனுமதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என கேள்வி எழுப்பி அஞ்சுமன் என்ற இஸ்லாமிய அமைப்பு வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதியில் மாற்று மதத்தினர் வழிபாடு நடத்த அனுமதிகோரும் இந்த மனு விசாரணைக்கு உகந்ததே என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை வரும் 22 ஆம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என மசூதி கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞானவாபி மசூதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.