மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இளைஞர் கொடூரமான முறையில் நடு சாலையில் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் காதல் மனைவி மீது அன்பு வைத்திருந்த நாகராஜ் மதம் பார்க்காமல் மனைவிக்காக மோதிரத்தை விற்று ரம்ஜான் கொண்டாடிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் நாகராஜ். 28 வயதான நாகராஜ் அதேபகுதியில் உள்ள கார் தொழிற்சாலையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சுல்தானா என்ற பெண்ணை காதலித்து வந்தனர். பெண் வீட்டார் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நாகராஜ்-சுல்தானா ஜோடி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். மதம் மாறி அவர்கள் திருமணம் செய்ததை பெற்றோர்கள் எதிர்த்து வந்தனர்.
இருப்பினும் இந்த காதல் ஜோடி வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி இரவு வேலை முடிந்து நாகராஜ் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது சுல்தானாவின் பெற்றோர்கள் நாகராஜை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். மேலும் 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுல்தானா 'அடிக்க வேண்டாம் என கெஞ்சிய' நிலையில் அதை பொருட்படுத்தாத இளைஞர் ஒருவர் கடப்பாரையால் நாகராஜை அடித்துக் கொல்லும் காட்சிகள் மனதை உறைய வைத்தது. கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தன்னை நம்பி வந்த பெண் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் அவர் முதல்முறையாக அவரது குடும்பத்தாருடன் இல்லாமல் தனியாக ரம்ஜானை கொண்டாட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் நாகராஜ். மனைவியின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த நாகராஜ் மனைவிக்கு இந்த விஷயத்தில் எந்த குறையும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அந்த ரூபாயை கொண்டு ரம்ஜான் பண்டிகைக்கு புது ஆடைகள் எடுக்க சுல்தானாவை அழைத்துச் சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையையும் சுல்தானாவிற்காக விமர்சையாக கொண்டாடியுள்ளார். ரம்ஜான் பண்டிகை முடிந்தவுடன் சுல்தானாவின் மூத்த சகோதரன் பூப் மற்றும் உறவினர் மசூத் ஆகியோரால் நாகராஜ் கொடூரமாக சாலையிலேயே கொலை செய்யப்பட்டார்.
''நூற்றுக்கணக்கானோர் கூடி இருந்தும் ஒருவர் கூட என் கணவரை காப்பாற்ற முன்வரவில்லை, என்னைக் காதலித்தால் என் சகோதரர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள் என்று ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் வாழ்ந்தாலும் இறந்தாலும் உன்னோடுதான் எனக் கூறியிருந்தார். என் கணவரை கொன்ற என் சகோதரர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும்'' என சுல்தானா தெரிவித்துள்ளார்.