அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று (20/08/2021) மாலை 04.30 மணியளவில் காணொளி மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, டி.ராஜா, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனையின் போது பேசிய சோனியா காந்தி, "2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்தவர், மக்களவைத் தேர்தல் வரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைத் தொடர வேண்டும். 2024 தேர்தலில் வெற்றி பெறுவதே முக்கிய இலக்கு. தேர்தலுக்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும்.நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே சிந்தனையில் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.