பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாமியார் மடம் ஒன்றில் வெறும் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இலங்கையுடன் மோதி வருகிறது. ஜூனியர் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விராட் கோலி தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து விராட் கோலி தன் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் தங்களது பிஸியான வேலைகளில் இருந்து நேரம் ஒதுக்கி விட்டு தன் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை அன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்த விராட் கோலி புனித நகரம் என கூறப்படும் விருந்தாவனுக்கு சென்றுள்ளார். மேலும், பாபா நீம் கரோலியின் ஆசிரமத்திற்கு சென்ற விராட் கோலி தன் மனைவி குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் தியானம் செய்துள்ளார். அப்போது அந்த தலத்தில் இருக்கும் முக்கிய சாமியார் ஒருவர் சொகுசான நாற்காலியில் மேலே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் வெறும் தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளார்கள். விராட் கோலி குடும்பத்தினரும் வெறும் தரையில் அமர வைக்கப்பட்டார்கள்.
அதன்பிறகு விராட் கோலிக்கு ஒரு மாலையும் அவரது மனைவிக்கு ஒரு துணி ஆடையும் வழங்கப்பட்டது. அப்போது அந்த சாமியார் தரிசன பொருட்களை தன் கையால் கொடுக்காமல் தன்னுடைய வேலை ஆட்கள் மூலம் விராட் கோலிக்கு வழங்கியுள்ளார். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத விராட் கோலி, அங்கிருந்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். ஆனால், உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட விராட் கோலி சாமியார் ஆசிரமத்தில் வெறும் தரையில் அமர வைக்கப்பட்ட வீடியோ காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.