2018-2019 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவீதமாகச் சரிந்துள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்துள்ளது என்றும் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதுவே ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
அதேசமயம் மூன்றாவது காலாண்டில் சீனாவின் ஜிடிபி 6.4 சதவீதமாக இருந்துள்ளது. எனவே வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரம் படைத்த நாடாகவே இந்தியா இருக்கிறது எனவும் மத்திய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டுக்கான மொத்த ஜிடிபி வளர்ச்சி கணிப்பையும் 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.