ஆந்திர மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், இன்று ஏற்பட்ட வாயுக் கசிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் ஆந்திராவில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.
விசாகப்பட்டினத்தின் பர்வாடா பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டி வளாகத்தில் சைனார் லைஃப் சயின்ஸ் எனும் தனியார் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று இரவு ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவு 12 மணி அளவில் திடிரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பென்சிமிடாசோல் எனும் வாயுக் கசிந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவில் தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அங்கிருந்தவர்களை சக தொழிலாளர்கள் மீட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.