சத்தீஸ்கர் மாநிலத்தில் காணாமல் போன மூன்று சிறுமிகளை அம்மாநில தனிப்படையினர் கரூரில் உள்ள செங்கல் சூளையில் மீட்டனர். அதே செங்கல் சூளையில் மேலும் 11 பேர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தவர்களையும் மீட்டதால் கரூரில் பரபரப்பு.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளைக் காணவில்லை என்று காவல்துறை, மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். புகாரைத் தொடர்ந்து நாராயண்பூர் மாவட்ட ஆட்சியர், அம்மாவட்டத்தைச் சேர்ந்த, சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை குழந்தைகள் நல அலுவலர் சரிதா மற்றும் காவல் ஆய்வாளர் உத்தம் காவுடே தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படையினரை அமைத்துத் தேடிவந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் தேடியுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன மூன்று சிறுமியும் இன்று கரூரில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பெயரில் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாராயண்பூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட சமூக நலத்துறை துணை ஆட்சியர் சைபுதீன், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ், கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குணசீலி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தனிப்படையினர், கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் அதிக அளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருவதால் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காணாமல் போன அந்த மூன்று சிறுமிகள் அங்கு வேலை பார்த்துத் தெரிய வந்தது. உடனடியாக அந்த மூன்று சிறுமிகளை மீட்டுள்ளனர். மேலும் அதே செங்கல் சூளையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 8 பெண்கள், 3 ஆண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களையும் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 14 பேர்களில் 11 சிறுமிகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும் மூன்று ஆண்கள் கொத்தடிமைகளாகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். அனைவரையும் மாயனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து 14 பேர்களிடம் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து எப்படி வந்தார்கள் என சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் கரூர் மாவட்ட காவல்துறையினர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை அழைத்து வந்த இடைத்தரகர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது குழந்தைகளை பணியில் அமர்த்தியது மற்றும் கொத்தடிமைகளாக வேலை வாங்கியது உள்ளிட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட சமூக நலத்துறையினர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். மீட்கப்பட்ட 14 நபர்களும் கரூரில் உள்ள அன்புக் கரங்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.