பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த சுமார் ஐந்தாயிரம் இந்து சிந்தி சமூக மக்கள், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்துவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், அங்குள்ள சிந்தி காலனி பகுதியில் வசிக்கின்றனர்.
இந்தநிலையில், அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் தங்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்கு மத்தியப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாகிஸ்தான் அகதிகள், தங்களது பாஸ்போர்ட்டை சான்றாக காட்டி தடுப்பூசி பெறலாம்" என தெரிவித்துள்ளார். மேலும், "மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. கடந்த மாதம் டச்சு நாட்டவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது" என கூறியுள்ளார்.