கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற உடன் கங்கை நதியை தூய்மை படுத்துவதற்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தது. 2020 ஆம் ஆண்டுக்குள் கங்கை நதி முழுவதுமாக தூய்மைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நெருங்கிவிட்ட நிலையில் கங்கை நதி குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதை நேரடியாக குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம். அந்த இடங்களில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
கங்கை நதி முழுவதும் வீரியம் மிகுந்த, கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்து இருக்கின்றன. அதனால் கங்கை நதி நீரை குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது. 86 இடங்களில் வெறும் 18 இடங்களில் மட்டும் குளிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது என தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகள் ஆகியும் திட்டமிடப்பட்ட வேளைகளில் கால்வாசி கூட முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.