நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டிற்கே சென்று பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அடிபட்லா பகுதியைச் சேர்ந்தவர் வைஷாலி. 24 வயதான வைஷாலி பயிற்சி பல் மருத்துவராக உள்ளார். நேற்று இவரது வீட்டிற்கு வந்த 100 பேர் கொண்ட கும்பல் வைஷாலியை கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து வீடியோ பதிவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ பதிவில் ஏராளமான இளைஞர்கள் வைஷாலியின் வீட்டை ஆயுதங்களால் தாக்குகின்றனர். கார் கண்ணாடிகளை உடைக்கின்றனர். வீட்டிலிருந்த நபர்களைத் தாக்குகின்றனர். வீடியோவில் இருந்த அனைவரும் மாஸ்குகள் அணிந்தும் சிலர் ஹெல்மட் அணிந்தும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இது குறித்து பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்த ரச்சகண்டா காவல்துறையினர் ஆறு மணி நேரத்தில் பெண் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து மீட்டனர். காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்ததில் வைஷாலியும் நவீன் என்ற நபரும் பூப்பந்து மைதானத்தில் சந்தித்துள்ளனர். இருவரும் நெருங்கிப் பழகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் வைஷாலிக்கு நவீன் கார் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வைஷாலியிடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நவீன் கூறியுள்ளார். இதற்கு வைஷாலி மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து சமூகவலைத்தள செயலிகள் மூலம் வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வைஷாலிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததென்றும் இதனைத் தெரிந்து கொண்டுதான் கும்பலை ஏவி நவீன் அந்தப் பெண்ணைக் கடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நவீன் மற்றும் உடன் சென்றவர்களில் 18 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.