நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31- ஆம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2022- 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக, காலை வேளையில் மாநிலங்களவையும், மாலை வேளையில் மக்களவையும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரயில்வே தேர்வாணையத்தில் எந்தவித மோசடியும் நடைபெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் சாரா எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி பீகாரில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. இது குறித்து பீகாரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முறைகேடு தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எந்த மோசடியும் நடைபெறவில்லை" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.