Skip to main content

பா.ஜ.க.வில் இருந்து குடும்பத்துடன் விலகிய முன்னாள் ஒன்றிய அமைச்சர்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Former Union Minister who left BJP with his family in haryana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இதற்கிடையில், பா.ஜ.க கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், அக்கட்சியின் மீது அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பா.ஜ.கவில் இணைவதும் என மாறி மாறி கட்சி மாறி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். இது பா.ஜ.க மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த பிரேந்தர் சிங், ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் இவர், உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா, 2021 மீதான கூட்டுக் குழு மற்றும் மனுக்களுக்கான குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். 

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங், பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ஜே.பி நட்டாவுக்கு அனுப்பியுள்ளேன். 2014-19ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏவாக இருந்த எனது மனைவி பிரேம் லதாவும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாளை காங்கிரசில் இணைவோம்” என்று கூறினார். 

காங்கிரஸுடன், 40 ஆண்டுகால நீடித்த உறவுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரேந்தர் சிங் பா.ஜ.கவில் சேர்ந்தார். கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று பிரந்தர் சிங்கின் மகன் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்