ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் எனக் கூறியிருந்தும், பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா தலைமைச் செயலகத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று, முதல்வராக ரேவந்த் ரெட்டி முதல்வரானதும், பி.ஆர்.எஸ் கட்சியினர் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவ், இன்று நள்ளிரவு 2 மணியளவில் தனது வீட்டின் குளியலறைக்குச் சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். பின்பு வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்காக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அவர் நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.