பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் புதியதாக "ஜல் சக்தி" துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறை அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் பொறுப்பேற்றார். நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டே ஜல் சக்தி அமைச்சரவையை உருவாக்கப்பட்டதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் அதிகாரிகளின் உயர்மட்ட குழுக்கூட்டம் நடைபெற்றது. அதில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் மாநிலங்கள் குறித்தும், தண்ணீர் வளத்தை அதிகரிக்க தேவையான செயல் திட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கஜேந்திர சிங் உத்தரவிட்டார்.
அதே போல் நிலத்தடி நீர்வளத்தின் தற்போதைய நிலையை குறித்து ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாகவும் அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கஜேந்திர சிங் 2024- ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், குடிநீர் திட்டங்களில் உத்தரப்பிரதேசம், ஒடிஷா, பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. இந்த மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சுமார் 14 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.