
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் தற்போது தினந்தோறும் 300 பேருக்கும், ஜிப்மர் மருத்துவமனையில் 300 பேருக்கும் பரிசோதனை செய்து வருகின்றோம். இதனை (1,000) ஆயிரம் பேருக்கு சோதனை செய்யும் அளவில் ஏற்பாடு செய்து வருகின்றோம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பல்வேறு பகுதிகளில் நியமிக்க நாளை (26.06.2020) நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலித்து அதற்கான உத்தரவுகளைப் போட உள்ளேன். கூனிச்சம்பட்டு பகுதியில் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தால் 70 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி பி.சி.ஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்வதால் கால தாமதம் ஆகின்றது. இதற்கு 4,500 ரூபாய் செலவு ஆகின்றது. ஆண்டிஜன் மூலம் பரிசோதனை செய்தால் அரைமணி நேரத்தில் சோதனை செய்யமுடியும். மேலும் செலவு குறைகின்றது. இதனைப் புதுச்சேரியில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நகர பகுதி மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளுக்கும் சென்று பரிசோதனை செய்ய நடமாடும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் அதிக பேருக்குச் சோதனை செய்ய வலியுறுத்தி வருகின்றது. இதனால் பல்லாயிரம் பேருக்குச் சோதனை செய்ய முடியும்.
மத்திய அரசு 19- ஆம் நாளாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றது. டீசல் மட்டுமே 11 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலும் 10 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இது மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும். இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் வந்துள்ளது. இதனால் விலையேற்றத்தை நிறுத்தவேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவருக்கு மத்திய அரசு 5 கிலோ அரசி இலவசமாகக் கொடுத்தார்கள். தற்போது பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆகவே பிரதமர் இதனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் வரை இலவச அரிசியைக் கொடுக்க வேண்டும். இது தொழிலாளர்கள் பசியின்றி வாழ வழிவகுக்கும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளேன்.
புதுச்சேரியில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். நகர பகுதியைச் சார்ந்தவர்கள் இரவில் வெளியே நடமாடுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. கோவில்களில், டீ, காபி கடைகளில் கூட்டம் கூட்டமாக நின்று வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளது." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார்.