பாஜகவின் 44 ஆவது ஆண்டு நிறைவு நாள் இந்தியா முழுவதும் அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் ஆண்டனி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி. குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்த போது நடந்த கலவரம் குறித்து ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம், அனில் ஆண்டனி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாஜக துவங்கப்பட்டு 44 ஆவது ஆண்டுவிழா நிறைவு நாளின் போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.கே.ஆண்டனி, அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்தது தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக அனில் ஆண்டனி கேரள காங்கிரஸின் ஐடி பிரிவு தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இணைந்தது பற்றி அனில் ஆண்டனி கூறும் போது, “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு குடும்பத்துக்காக வேலை செய்வதாக நம்புகிறார்கள். ஆனால், நான் காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்வதாகவே நம்பினேன். எனது ட்விட்டர் பதிவை நீக்கும்படி அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், நான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன். பன்முகத்தன்மை கொண்ட உலகில் இந்தியாவை முன்னணி இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் பிரமதர் மோடி செயல்பட்டு வருகிறார். எனவே, அவரால் ஈர்க்கப்பட்டு தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.