மத்திய பாஜக அரசு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18லிருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இன்று இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சரத்பவார் இல்லத்தில் இன்று தொடங்கி நடைபெற்றது. கே.சி. வேணுகோபால், டி.ஆர். பாலு உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் விவாதிப்போம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இக்கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. போபாலில் அக்டோபர் முதல் வாரத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்த முதல் பொதுக்கூட்டமானது விலைவாசி உயர்வு; பாஜக ஆட்சியின் ஊழல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போபால் மட்டுமல்லாது நாக்பூர், குவகாத்தி, சென்னை, டெல்லி, பாட்னாவிலும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.