மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (வயது 80). இவர் மேற்கு வங்கத்தின் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கடைசி முதலமைச்சர் ஆவார். கடந்த 1944 ஆம் ஆண்டு பிறந்த புத்ததேவ் பட்டாச்சார்யா 1966 ஆம் ஆண்டு தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இன்று (08.08.2024) காலை காலமானார். இவர் நீண்ட நாட்களாக நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானது குறிப்பிடத்தக்கது.
புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலர் எம்.டி.சலீம் கூறுகையில், “தொழிலாளர்கள் மற்றும் சாமானியர்களைப் பற்றிச் சிந்திக்கும் எங்களுக்கும், மாநிலத்துக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் இது மிகவும் வருத்தமான செய்தி. மறைந்த புத்ததேவ் பட்டாச்சார்யா நல்ல நிர்வாகி, நேர்மையான, ஆக்ரோஷமான மதச்சார்பற்ற, அத்தகைய தலைவரை இழந்தது நம் அனைவருக்கும் இழப்பு ஆகும். மருத்துவ அறிவியலுக்காக அவர் உடலை தானம் செய்ததால், மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதித்த பின்னர் அவரது உடலை மருத்துவமனையில் ஒப்படைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்த் அதிகாரி, புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவு குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்; அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.