மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளத்துக்கு தடை விதிக்கப்படாது. ஆனால் அதில் ரவுடிகள் மற்றும் கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங் கூறினார். சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திக்விஜய் சிங் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர், கர்நாடகா மாநிலத்தில் பஜ்ரங் தளத்திற்கு தடை விதிக்கப்படும் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், “ பஜ்ரங் தளத்தில் சில நல்லவர்கள் உள்ளனர். அதே நேரத்தில் அதில் ரவுடிகள் மற்றும் கலவரங்களை ஏற்படுத்துபவர்களும் உள்ளனர். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாட்டு மக்களை பிரித்து வருகின்றனர். அதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் அமைதியை ஏற்படுத்துங்கள். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பஜ்ரங் தளத்துக்கு தடை விதிக்கப்படுமா என்று கேள்வி கேட்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்படாது. ஆனால், அதில் ரவுடிகள் மற்றும் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நாட்டில் 82 சதவீத மக்கள் இந்துக்கள், நாடு ஏற்கனவே இந்து ராஷ்டிராவாக உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறியிருந்தார். இது குறித்து திக்விஜய்யிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேட்ட போது, ” அவர் அப்படி எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் சவுகான் ஆகியோர் இந்திய அரசியல் சட்டத்தின் மூலமாக பதவி ஏற்றார்களா? அல்லது இந்து ராஷ்டிரத்தின் மூலமாக பதவி ஏற்றார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.